×

ஜி20 மாநாட்டு வரவேற்பு பதாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் இல்லை: விமான நிலையம் வரும் பயணிகள் அதிருப்தி

சென்னை: ஜி20 மாநாட்டு வரவேற்பு பதாகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் இல்லாதது சென்னை விமானப் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜி 20 உச்சி மாநாடு இந்த ஆண்டு, இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதையொட்டி  தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 31) முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை 3 நாட்கள் கல்வி துறை சார்ந்த ஜி20 கூட்டம் சென்னையில் நடக்கிறது. இன்று சென்னை ஐஐடியிலும், பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலிலும் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் தமிழ்நாட்டிற்கு  வர தொடங்கியுள்ளனர்.

அவர்களை வரவேற்கும் விதத்தில், சென்னை விமான நிலையத்தில் மலர் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டு, வரவேற்பு பதாகைகளும் விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிகள் வரை வைக்கப்பட்டுள்ளன. வரவேற்பு பதாகைகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3  மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. அதில், “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் மோடியின் படம் மட்டுமே அந்த விளம்பர பதாகையில் இடம்பெற்றுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் ஒன்றில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரோ, அல்லது புகைப்படமோ இடம்பெறவில்லை.

இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளை கேட்டதற்கு, வரவேற்பு பதாகைகள் ஜி20 மாநாட்டு குழுவால் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதாகைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி, தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில், சென்னை விமான நிலையத்தில் இந்த வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அது வைப்பதற்கு முன்பு, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கித்தான் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுப்பதற்கு முன்பு, பதாகைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் படத்தையும் இடம்பெறச் செய்யுங்கள் என்று கூறியிருக்கலாம். ஆனால், அதை விமான நிலைய அதிகாரிகள் செய்ய தவறிவிட்டனர் என்றனர்.

Tags : G20 Summit ,Chief Minister ,MK Stalin , G20 Summit Welcome Banner Missing Chief Minister MK Stalin's Image: Airport Passengers Dissatisfied
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...