×

மதவெறி பித்து பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு அநாகரிக அரசியலில் ஈடுபடுவதா? பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்

சென்னை: மதவெறிப் பித்துப் பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக எச்சரித்துள்ளது. இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாதம் 27ம் தேதி மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய திமுக பொருளாளர், ஒன்றிய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்த கோயில்களுக்குப் பதிலாக, இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும், அதுவும் கூடுதல் வசதிகளுடன் அவரே மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது பற்றியும் சுட்டிக்காட்டி - வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்துவிட்டு அரைவேக்காட்டு அரசியல் நடத்த வந்த அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் டி.ஆர்.பாலு பேசிய வீடியோவின் முன் பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டுள்ளார். இன்னும் சொல்லப் போனால், அண்ணாமலை பத்திரிகைகளையும் படிப்பதில்லை.  அதுபோன்ற இணையதளங்களில் உள்ள முழுப் பேச்சினையும் படிப்பதில்லை. பாவம் அவருக்குப் படிக்க தெரியவும் இல்லை. முழு வீடியோவைப் பார்க்கவும் தெரியவில்லை. ஆனால் கீழ்த்தரமான அரசியல் செய்வதற்காக ஒரு பேச்சை வெட்டி வெளியிட மட்டுமே தெரிந்திருக்கிறது.

இனி அவரை “கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை” என்றே அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மதவெறி துவேஷத்தைக் கிளப்ப வெட்டி ஒட்டி விஷத்தைக் கக்கியிருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு உருவாகியிருக்கும் ஒரு கேடு என்பதை இதுபோன்ற தனது அறமற்ற செயல்களால் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய வழியின்றி, இடைத்தேர்தலில் போட்டியிட முடியாமல் திணறி, அதிமுகவிற்குள் இரு அணிகளை உருவாக்கி மோத விட்டு, அக்கட்சியை பலவீனப்படுத்தித் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க மிரட்டும் அரசியலை செய்து வரும் பாஜவின் அண்ணாமலைகளின் மூளைகளுக்கு மதவெறிப் பித்துப்பிடித்து வளர்ச்சிக்கு எது தேவை, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன வேண்டும் என்பது அறியாமல், திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது தேசிய கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் மட்டுமல்ல - மிகப்பெரிய அவலமும் ஆகும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இழிவுபடுத்தி-மாநிலத்தில் அமைதியைக் கெடுக்கவும்-முன்னேற்றத்தைத் தடுக்கவும் முயற்சி செய்யும் அண்ணாமலை இதுபோன்ற மலிவான செயல்களை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Baja ,Anamalai , A bigoted frenzy—indulging in cheap propaganda and indecent politics? DMK condemns BJP leader Annamalai
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...