சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் அஞ்சலி

சென்னை: சுதந்திர போராட்டத்தின் போது உயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து சிக்னல்களில் காலை 11 மணிக்கு 2 நிமிடங்கள் வாகன ஓட்டிகள் சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர். காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி, சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகர காவல் எல்லையில் உள்ள அனைத்து முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறிப்பாக, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் சிக்னல், தேனாம்பேட்டை, வேப்பேரி, எழும்பூர் பாந்தியன் சாலை, சென்ட்ரல், அடையாறு, கோயம்பேடு 100 அடி சாலை, ராஜிவ் காந்தி நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல் என பெரும்பாலான சிக்னல்களில் நேற்று காலை சரியாக 11 மணிக்கு அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடங்கள் சாலையிலேயே நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

Related Stories: