×

சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை, வரவேற்க வைக்கப்பட்டுள்ள, வரவேற்பு பதாகைகளில், பிரதமர் மோடியின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் இந்த கூட்ட வரவேற்பு பதாகையில், முதல்வர் படம் இடம் பெறாதது, பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் 50 முக்கிய நகரங்களில், பல்வேறு துறைகளுடன் இணைந்து ஜி20 அமைப்பு சார்பில், ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நாளை முதல், பிப்ரவரி 2ம் தேதி வரை, 3 தினங்கள் கல்வி துறை சார்ந்த, இந்த ஜி-20 கூட்டம் சென்னையில் நடக்கிறது. நாளை சென்னை ஐஐடியிலும், பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலிலும் நடக்க இருக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், தமிழ்நாட்டிற்கு வர தொடங்கியுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதத்தில், மலர் வண்ண கோலங்கள் வரையப்பட்டு, வரவேற்பு பதாகைகளும் விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து, வெளிப்பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும் ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் மோடியின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 3 தினங்கள் நடக்க இருக்கிறது. அதோடு விமானங்களில் இறங்கி வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளை, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறையான முக்கிய பிரமுகர்களின் ‘‘செக்யூரிட்டி” போலீஸ் அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு விருந்தினர் வரவேற்பு துறையான, ‘‘புரோட்டா கால்” அதிகாரிகள் ஆகிய, தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் அழைத்து வந்து, விமான நிலையத்தில் இருந்து, தகுந்த பாதுகாப்புடன் அவர்களை தங்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் வரவேற்பு பதாகைகளில் ஒன்றில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரோ அல்லது புகைப்படமோ இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளை கேட்டதற்கு, ‘இந்த வரவேற்பு பதாகைகள் அனைத்தும், ஜி-20 மாநாட்டு குழுவால் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பதாகைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி, தங்கள் பொறுப்பை தட்டி கழிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில், சென்னை விமான நிலையத்தில், இந்த வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அது வைப்பதற்கு முன்பு, சென்னை விமான நிலைய உயரதிகாரிகளிடம் அனுமதி வாங்கி தான் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுப்பதற்கு முன்பு, பதாகைகளில் முதல்வர் படத்தையும் இடம்பெற செய்யுங்கள் என்று கூறியிருக்கலாம். அதை செய்ய ஏனோ விமான நிலைய அதிகாரிகள் தவறிவிட்டனர்.

Tags : G-20 ,Chennai airport , Dissatisfaction over lack of Chief Minister's picture on banners to welcome G-20 summit delegation at Chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்