×

அதிமுக ஆட்சியில் இ-டாய்லெட்கள் பயன்பாட்டுக்கே கொண்டுவரப்படவில்லை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளித்தார். இதை தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேரமில்லா நேரத்தின் போது, மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசுகையில், ‘‘ கடந்த ஜனவரி 9ம் தேதி தமிழ்நாடு என்ற பெயரை கவர்னர் பேரவையில் பேச மறுத்தது கண்டனத்திற்குரியது. அண்ணா, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரின் பெயரை சொன்னால் நாக்கு தீட்டு பட்டுவிடும் என்பதை எண்ணி சொல்லாமல் இருந்திருக்கிறார். சென்னை மாநகராட்சி சார்பில் கவர்னருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை மேயர் கொண்டு வர வேண்டும். மேலும் மாமன்ற கூட்டத்தை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்றார். அதற்கு மேயர் பிரியா, அடுத்த மாதத்தில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின்னரே மாமன்ற கூட்டம் தொடங்கும் என்றார்.

இதை தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் 2014 முதல் 2017ம் ஆண்டு வரை சுமார் 348 இடங்களில் இ-டாய்லெட்டுகள் மற்றும் மாடுலர் டாய்லெட்டுகள் அமைக்கவும், அதை பராமரிக்கவும் 4 நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த 348 டாய்லெட்டுகளின் இடங்களின் விபரங்களும், அதன் பராமரிப்பு விபரமும் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே, எனது தணிக்கை ஆய்வில் அதிகாரிகளிடம் கேட்ட போது, இரு மண்டலங்களில் மொத்தம் 24 இ-டாய்லெட்கள் இருப்பதாகவும், ஆனால் அதில் தற்போது வேறும் 2 மட்டுமே உபயோக நிலையில் இருப்பதாகவும் கூறினர்.  இதுகுறித்து அவர்களிடம் நான் விளக்கம் கேட்டேன். அவர்கள் அளித்த விபரத்தில், கடந்த அதிமுக ஆட்சியிலேயே ஒப்பந்ததாரர்கள் பல டாய்லெட்களின் பணியை முழுமையாக முடிக்காமல் கைவிட்டு சென்று விட்டதாகவும், நிர்வாக சீர் கேட்டால் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்குவதில் குளறுபடி நடைபெற்றதால் பல டாய்லெட்கள் அமைக்கப்பட்டும் உபயோகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், தற்போது இந்த டாய்லெட்டுகள் பயன்பாட்டுக்கு வராமலேயே உருகுலைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

முறையாக திட்டமிடல் ஏதும் இல்லாமல் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் ஒன்றிய அரசின் மானிய நிதியை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த 348 டாய்லெட்கள் குறித்த முழு அறிக்கையை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும். மேலும் நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு டெண்டர் ஒப்பந்தத்தை பின்பற்றாத ஒப்பந்ததாரர்கள் இனி டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். பெருங்குடி எம்ஜிஆர் சாலையில் இருக்கும் நில உரிமையாளர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனிடம் ரூ.29,33,000 திறந்த வெளி ஒதுக்கீடு கட்டணம் வசூலிக்காமல் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நிலத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கு சீல் வைத்து, தற்போதைய வழிகாட்டு மதிப்புப் படி திறந்த வெளி ஒதுக்கீடு கட்டணம் அபராதத்துடன் வசூலிக்க வேண்டும்.

உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்களின் உறுப்பினர் நிதி ரூ.35லட்சத்தில் இருந்து சுமார் ரூ.7.5லட்சத்துக்கு மேல் ஜிஎஸ்டி மற்றும் இதர இனங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த நிதியை ரூ.ஒரு கோடியாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கமளிக்கையில், ‘‘2014 ஆண்டு முதல் இ-டாய்லெட்கள் 144 இடங்களில் அமைக்கப்பட்டது. தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இ- டாய்லெட்களை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து டாய்லெட்கள் சரிசெய்ய அறிவுறுத்தினோம். 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிதாக கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் 358 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக சென்னையில் கழிப்பறைகள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர்’’ என்றார்.

Tags : Standing Chairman ,Chennai Municipal Meeting , E-toilets have not been brought into use in AIADMK rule: Chairman of the Standing Committee of the Chennai Municipal Corporation alleges sensationalism
× RELATED சென்னை மாநகராட்சி கூட்டத்தில்...