×

கோவையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது-20 நீர்நிலைகளில் தனித்தனி குழுவினர் கணக்கெடுக்கின்றனர்

கோவை :  தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-2023ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணியானது நீர் பறவைகள், மற்றும் நிலப்பறவைகள் என இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. இதில், நீர் பறவைகளின் கணக்கெடுப்பு கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதனை தொடர்ந்து மார்ச் 4,5ம் தேதிகளில் நிலப்பறவைகளின் கணக்கெடுப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பறவைகளின் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் உத்தரவிட்டார். இந்த கணக்கெடுப்பு பணி மாநிலம் முழுவதும் நடப்பதால் இதில் பறவைகள் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.

 அதன்படி, கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சிகள், எப்படி கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்டவை குறித்து பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு கோவை மாவட்ட வனத்துறை சார்பில் பயிற்சிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சி குளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம், ஆச்சான்குளம், காளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திகுட்டை உள்ளிட்ட மொத்தம் 20 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஒவ்வொரு அணியிலும் 3 முதல் 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

இவர்கள், நீர்நிலைகளில் இருந்த பறவைகள் குறித்து கணக்கெடுத்துள்ளனர். இதில், சில அரிய வகை பறவை இனங்கள், அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியின்போது மொத்தம் 228 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 118 பாசரைன் வரிசையை சேர்ந்தவையாகும். 25 நீர்வாழ் பறவைகள், 16 கழுகுகள் மற்றும் பருந்துகள், 11 குக்குறுவன், மரங்கொத்திகள், 10 மீன் கொத்திகள், பஞ்சுருட்டான்கள் மற்றும் பனங்காடை, 8 புறா இனங்கள், 8 குயில் இனங்கள், 7 மயில் உள்ளிட்ட தரைவாழ் பறவைகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெரிய இருவாச்சி, மலபார் இருவாச்சி, கருங்காடை, சாம்பல் நெற்றிப்புறா, பச்சைப்புறா, செவ்வலகு செண்பகம், பெருங்கண்ணி, பருத்த அலகு ஆலா, சிறிய மீன் கழுகு, பெரிய புள்ளிப்பருந்து, மலபார் மைனா, கருஞ்சிவப்பு வால் பூச்சிபிடிப்பான் போன்ற பறவைகள் பதிவுசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்டு வரும் பறவைகள் கணக்கெடுப்பில் கூடுதல் பறவைகள் இனங்கள் பதிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 20 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் ஈடுபட்டனர். இவர்கள், தனித்தனி குழுவாக பிரிந்து நீர்நிலைகளில் 4 மணி நேரம் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இவர்கள் கணக்கெடுப்பு குறித்த முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும்’’ என்றார்.


Tags : Coimbatore—20 , Coimbatore: In Tamil Nadu, bird surveys are conducted every year after the end of the northeast monsoon. Accordingly,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...