வருசநாடு பகுதியில் பல்லாங்குழி சாலையால் பரிதவிப்பு தரமான தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்-மலைக்கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு : வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, ராஜீவ்நகர் இந்திரா நகர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லக் கூடிய தார்ச்சாலை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வருசநாடு பகுதியில் மஞ்சனூத்து செக்போஸ்ட் முதல் வெள்ளிமலை வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்த சாலை தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் தார்ச்சாலை போட்டு பல ஆண்டுகளாகியும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் சாலைகள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், சில இடங்களில் மெகா பள்ளங்களுடன் காணப்படுகிறது. இதனால் அரசரடி, வெள்ளிமலை, இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மலைக்கிராமவாசிகள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் வருசநாடு, போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணிகள் மற்றும் விரிவாக்க பணிகள் ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது.

எங்கள் மலைக்கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாமல் சிரமத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், பாதசாரிகளின் காலை கற்கள் பதம் பார்த்து விடுகிறது. டூவீலர், வேன்களின் டயர்களும் அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. எனவே, மலைக்கிராம மக்களின் நலன்கருதி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: