×

தமிழக-கேரள எல்லையோரப் பகுதி மலைக்கிராமங்களில் வனவிலங்குகள் தொடர் அட்டகாசம்

*வீடுகள், ரேஷன் கடை, வாகனங்களை அடித்து துவம்சம்

*வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

மூணாறு/போடி : தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்டவனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மூணாறில் காட்டு யானைகள் அதிகம்

ேகரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லைஅதிகரித்து வருகிறது. மூணாறு அருகே பூப்பாறை பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. இதேபோல், பூப்பாறையை அடுத்த சாந்தன்பாறை கிராம பஞ்சாயத்தில் ஆனையிறங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் காட்டுயானை அடித்து நொறுக்கியது.

மூணாறில் கண்ணன் தேவன் கம்பெனிக்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஓராண்டில் 11 முறைக்கும் மேல் இங்குள்ள ரேஷன் கடைகளை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது.

இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பண்ணைப்புரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.

புலி, சிறுத்தைகள் நடமாட்டமும் அதிகம்

கேரள மாநிலம் பழைய மூணாறில் தேயிலை தோட்ட பகுதியில் ஷீலா ஷாஜி உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த புலியை கண்டதும், அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களை விரட்டிய புலியிடம் ஷீலா சிக்கி கொண்டார். புலி ஷீலாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க முயன்றபோது, அவரின் அலறல் சத்தம் கேட்டு புலி மீண்டும் காட்டுக்குள் ஓடியது.

புலியின் தாக்குதலில் காயமடைந்த மயங்கி விழுந்த ஷீலாவை, சக ஊழியர்கள் உடனடியாக மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் தொழிலாளியை புலி தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரை சிறுத்தை தாக்க முயன்றபோது, அவர் தற்காப்புக்காக கத்தியால் சிறுத்தையை ெகான்ற சம்பவமும் நடந்தது.

தென்னங்கன்றுகள் நாசம்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு எள்கரடு பகுதியில் உள்ள பாண்டி என்ற விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் புகுந்த காட்டுயானை, 50க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி விட்டு அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து விவசாயி பாண்டி வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகாரளித்தார். அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பகல்நேரத்திலேயே சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.

உயிர்பலிகளால் போராட்டங்கள் அதிகம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே பன்னியார் எஸ்டேட் கோழிபண்ணை குடியை சேர்ந்தவர் சக்திவேல் (51). இவர் வனத்துறை ஊழியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுயானை தாக்கி பலியானார். இதைத்தொடர்ந்து வனவிலங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தோண்டிமலை அருகே கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போடிமெட்டு அருகே கேரளா மாநிலம் பியல் ராவ் பகுதியில் ஒரு வீடு மற்றும் பண்ணையார் எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானை அடித்து நொறுக்கியது. காட்டு யானைகளின் தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போடிமெட்டு அருகே கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த கேரளா வனத்துறையினர் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்னே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Tamil Nadu-Kerala , Munnar/Bodi : Wild elephant, wild cow, leopard, bear, tiger in the hilly villages of Tamil Nadu-Kerala border areas.
× RELATED கம்பம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை