ராஜிவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ விபத்து: போக்குவரத்து பாதிப்பு

துரைப்பாக்கம்: ராஜிவ்காந்தி சாலையில் ஓடும் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (38). இவர் நேற்று முன்தினம் சோழிங்கநல்லூரில் உள்ள சர்வீஸ் சென்டரில் தனது காரை சர்வீஸ் செய்ய கொடுத்து இருந்தார். அங்கு, சர்வீஸ் முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு காரை எடுத்து சென்றுள்ளார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறிது.

இதனால், காரை சாலையோரமாக நிறுத்தினார். சிறிது நேரத்தில் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். தகவலறிந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி, காரில் பரவிய தீயை முற்றிலும் அணைத்தனர்.

அதற்குள், அந்த கார் முழுமையாக எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில், துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவினால் கார் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: