×

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெட்டி 16.5 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி, மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். காய்கறி வியாபாரி. இவர், ஆரணி பகுதிகளில் காய்கறிகளை வாங்கி, நாள்தோறும் சென்னை கொடுங்கையூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவது வழக்கம். இவருக்கு மனைவி மாலதி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 23ம் தேதி உதயகுமார் காய்கறி வியாபாரத்துக்காக சென்னை சென்றிருந்தார். 2 மகள்களும் பள்ளிக்கு சென்றுவிட்டதால், வீட்டில் மாலதி மட்டும் தனியே இருந்துள்ளார்.

இந்நிலையில், அன்று மதியம் மாலதி வீட்டில் தனியே இருப்பதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், வீட்டின் பின்புறம் வழியாக ஒரு மர்ம நபர் மாடிக்கு ஏறி, அங்கிருந்து முகமூடி அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் மாலதியை கத்திமுனையில் மிரட்டி, பீரோ சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்து, ஒரு வாலிபரின் கை கட்டை விரலை கடித்து தப்பிக்க முயன்றதுடன், அலறி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர், மாலதியை கத்தியால் சரமாரி வெட்டி, பீரோவில் இருந்த 16.5 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு பைக்கில் தப்பி ஓடினர்.

படுகாயத்துடன் மாலதி அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாலதியை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவில் இருந்த பைக்கின் பதிவெண்ணை வைத்து, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது எதுவும் தெரியாதது போல் நழுவி சென்றனர். இதைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் நேற்றுமுன்தினம் மாலை மீண்டும் அந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (22), ஜெய்பீ (24) எனத் தெரியவந்தது. இதில் ஒரு வாலிபரின் கட்டைவிரலில் மாலதி கடித்த காயம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசாரின் கிடுக்கிப்பிடியில் இருவரும் மாலதியை வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சின்னம்பேடு ஏரியில் துணிமூட்டையில் கட்டி போடப்பட்டு இருந்த 16.5 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : Savaran , 16.5 Savaran hacked a woman who was alone at home, robbed Rs 1.5 lakh: 2 arrested
× RELATED தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது: இன்று...