×

திருமணமான 4வது நாளில் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

அண்ணாநகர்: திருமணமான 4வது நாளில் பைக்கில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அமைந்தகரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அமைந்தகரையில் உள்ள தி.வி.கே. பார்க் அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர், பைக்கில் இருந்து தவறி விழுந்து, படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து  அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மணி (எ) சரவணன் (26) என்பதும், கார் டிரைவரான இவருக்கும் அமைந்தகரையை சேர்ந்த சோபனா (26) என்பவருக்கும் கடந்த 26ம் தேதி, பெரியோர்கள் முன்னிலையில் திருவேற்காடு ஸ்ரீ நாக கன்னியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றதும் தெரிந்தது. அமைந்தகரையில் உள்ள மாமியார் வீட்டில் விருந்துக்கு வந்திருந்த சரவணன், நேற்று இரவு போதையில் பைக்கில் மதுரவாயலில் இருந்து அமைந்தகரை நோக்கி சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சரவணன், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது சடலத்தை   மீட்ட போலீசார் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாளில் புதுமாப்பிள்ளை  விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Newlywed dies in accident on 4th day of marriage
× RELATED பள்ளி மாணவ, மாணவியருக்கு போதை விழிப்புணர்வு பேரணி