பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் இன்று அனைத்து கட்சி கூட்டம்: ஒன்றிய அரசு ஏற்பாடு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு, இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2ம் கட்ட பட்ஜெட் தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், இதுவே ஒன்றிய பாஜ அரசின் தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட்டாக இருக்கும்.

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து இரு அவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக  நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கேட்கும் வகையில், ஒன்றிய அரசு தரப்பில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ள விவாதங்கள் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் அரசுடன் ஆலோசனை நடத்துவார்கள். அதே சமயம், கூட்டத் தொடர் நடத்துவதில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு அரசு தரப்பில் கேட்கப்படும். கடைசியாக நடந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது, அருணாச்சல் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதல் குறித்த தகவல் வெளியானது. இதுதொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

அதே போல இம்முறை, பிபிசி ஆவணப்படம், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பட்ஜெட் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுத்தர மக்கள் மீது கவனம் செலுத்துங்கள்

வரும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், கடந்த 8 ஆண்டு கால பாஜ ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், ஒட்டுமொத்த பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, நடுத்தர மக்கள் மீது கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அரசின் திட்டங்கள் ஏழை, விளிம்பு நிலை மக்களுக்கும் பயன் தரும் அதே வேளையில், நடுத்தர மக்களுக்காகவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதை அமைச்சர்கள் தெரியப்படுத்த வேண்டுமென பிரதமர் கூறி உள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கு பல்வேறு வழிகளில் உதவிய திட்டங்களின் விவரங்கள் குறித்து நிதி அமைச்சர் விளக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2023ம் ஆண்டில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: