×

வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரத்திலிருந்து கோவளத்திற்கு மாற்று மழைநீர் கால்வாய் பணி: சிஎம்டிஏ கருத்து கேட்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

தாம்பரம்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்  சார்பில் 2027-2046 ஆண்டிற்கான சென்னை பெருநகர மக்களுக்கான 3ம் முழுமை  திட்டத்தின் தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிக்காக பொதுமக்களின்  கருத்துக்களை கேட்கும் கூட்டம் குரோம்பேட்டையில் நேற்று  நடைபெற்றது. இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டலக் குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுநல சங்கங்கள், பொதுமக்கள், மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் நரசிம்மன் பேசுகையில், ‘‘சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 1980களில் செம்பரம்பாக்கம் ஏரியின் மேல் பகுதியில் 2 நீர்த்தேகங்கள் அமைக்க வேண்டுமென திட்டமிட்ட நிலையில் அவை அமைக்கப்படவில்லை. அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கவும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கும் பயன்படும் அவற்றை செயல்படுத்த வேண்டும். வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரத்திலிருந்து கோவளம் பகுதிக்கு மாற்று மழைநீர் கால்வாய் அமைத்து வெள்ள நீரை கொண்டு செல்ல எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓஎஸ்ஆர் நிலங்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். குரோம்பேட்டை அருகே சாலையை கடக்க நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டிடம் கட்டும்பொது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு கட்டமைப்பு வசதிகளுக்கான கட்டணம் வணிகரீதியான கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு 70 ரூபாயும், குடியிருப்புகளுக்கு சதுர அடிக்கு 35 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரேடியல் சாலை, ஜிஎஸ்டி சாலை உட்பட தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சுமார் 100 கோடி அளவிற்கு இந்த கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த கட்டணங்களில் 80 சதவீதத்தை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். திமுக வழக்கறிஞர் ராஜாராமன் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அதே நேரத்தில் ஆண்டாண்டு காலமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை தொலைதூரத்திற்கு வெளியேற்றாமல் குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியை ஏரியில் வகை மாற்றம் செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அவர்களை அங்கே குடியமர்த்தி ஏரிகளை தூர்வாரி அவற்றை பாதுகாக்க வேண்டும், அதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

மேலும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், முக்கிய சாலைகளில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், குடிநீர் வசதி சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் நல சங்க நிர்வாகிகள் முன்வைத்தனர்.

Tags : Kovalam ,CMDA , Tambaram to Kovalam alternative rainwater canal to prevent floods: CMDA insists on consultation meeting
× RELATED கோவளத்தில் இப்தார் நோன்பு திறப்பு