நான் எப்போதுமே ஜோக்கர்தான்: சொல்கிறார் யோகி பாபு

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. இதில் கதையின் நாயகனாக யோகி பாபு, அவரது மனைவியாக சுபத்ரா ராபர்ட், மகளாக ஸ்ரீமதி நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ஷான் எழுதி இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 3ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து யோகி பாபு கூறியதாவது:

இந்தப் படத்தில் எனது வழக்கமான காமெடி இருக்காது. இது ஒரு தந்தைக்கும், மகளுக்குமான கதையாகும். குழந்தைகளுக்குப் பிரச்னை என்றால் தந்தைக்கு எப்படி வலிக்கும் என்பது இந்தப் படம் சொல்லும் கதையாகும். நானும் ஒரு பெண் குழந்தையைப் பெற்று இருப்பதால் அந்த வலியை நானறிவேன். படத்தில் நான் பிரமாதமாக நடித்ததாக சொன்னார்கள். அது என் கையில் இல்லை. இயக்குனரின் கையில்தான் இருக்கிறது. நான் நன்றாக நடித்தால், அதற்கு இயக்குனர் மட்டுமே காரணம்.

அடிப்படையில் நான் ஒரு காமெடியன். காமெடிதான் எனக்கு முழுநேர தொழில். ஒரே ஒரு காமெடி சீன் கிடைக்காதா என்று அலைந்தவன் நான். தற்போது அதிகமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறேன். எனது முகம் எப்போதுமே ஜோக்கர் முகம்தான். எனது முகத்தில் ஏதாவது ஒன்று இருப்பதாக  நினைத்து, நான் கதை நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று வருபவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். அப்படி என்னை நம்பி வந்த இயக்குனர் சொன்னதை ஏற்று நான் நடித்த படம்தான், ‘பொம்மை நாயகி’. எனது நடிப்புக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் என்ன ரியாக்‌ஷன் தருவார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Related Stories: