மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்: மின்நுகர்வோருக்கு மின்வாரியம் அறிவுரை

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, நாளை கடைசி நாள். இதுவரை இணைக்காதவர்கள் உடனே இணைக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அக்டோபர் 6ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து நவ. 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. கடந்த டிச.31ம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது 1.62 கோடி பேர் மட்டுமே இணைத்திருந்தனர். கால நீட்டிப்பு வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில் வரும் ஜன.31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ேடாரின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்றும், நாளையும் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த முறை கால நீட்டிப்பு வழங்கிய போது இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கால நீட்டிப்பு செய்யப்படும் என எண்ணாமல் மின் இணைப்புடன்  ஆதார் எண் இணைக்காமல் உள்ளவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

Related Stories: