×

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி 217 பதவிகளுக்கு 18,440 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் 126 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது

சென்னை: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணியில் 217 பதவிகளுக்கு நேற்று நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 18,440 பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 85 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் 211 இடங்கள், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து சார்நிலை பணியில் கணக்கிடுபவர் 5 இடங்கள், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்து சார்நிலை பணியில் புள்ளியியல் தொகுப்பாள் 1 இடம் என 217 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 15ம் தேதி அறிவித்தது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த அக்டோபர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 35,286 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 11,870 பேர், பெண்கள் 23416 பேர் அடங்குவர். இந்த நிலையில் இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டப்படிப்பு தரத்திலும்), பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. அதாவது கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரம்), பொது அறிவு(பட்டப்படிப்பு தரத்திலும்) நடந்ததது.

மாநிலம் முழுவதும் 217 மையங்களில் தேர்வு நடந்தது. சென்னையை பொறுத்தவரை 18 மையங்களில் நடந்தது. சென்னையில் நடந்த மையங்களில் 4608 பேர் தேர்வு எழுதினர். தேர்வு காலை 9.30 மணிக்கு தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியே கடைசி கட்டமாக தேர்வுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டனர். தேர்வை கண்காணிக்கும் வகையில் ஒருவர் வீதம் 126 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறுகையில்:
ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளில் காலையில் நடைபெற்ற தேர்வை 18,531 பேரும், பிற்பகலில் நடந்த தேர்வை 18,440 பேர் எழுதியுள்ளனர் என்றனர். இதைத் தொடர்ந்து ஒரு பதவிக்கு சராசரியாக 85 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags : Tamil Nadu , Written Test in 126 Centers of Integrated Statistics, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...