மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் , தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள பெலாரசின் 24 வயதான அரினா சபலென்கா 25வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரைபகினாவுடன் மோதினார். இதில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
வெற்றிக்கு பின் சபலென்கா கூறியதாவது: என்னை கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு கடினமான இழப்புகள் தேவை (கடந்த கால தோல்விகள்) என்று நான் இப்போது உணர்கிறேன். நான் அந்த போட்டிகளில் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் தான் இப்போது நான் ஒரு வித்தியாசமான வீராங்கனையாகவும், வித்தியாசமான அரினாவாகவும் இருக்கிறேன். முதல் செட்டில் நான் பதற்றமாக இருந்தேன். நான் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும், தொடர்ந்து போராட வேண்டும்,
இந்த போட்டியில் மீண்டு வர எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கடந்த ஆண்டில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தேன். நான் மிகவும் கடினமாக உழைத்தேன். இந்த கோப்பைக்கு நான் தகுதியானவர். எலினாவுக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு சிறந்த வீராங்கனை, என்றார்.