பெரியாறு அணை தண்ணீர் ெசல்வதில் சிக்கல் 100 அடி நீர்வழிப்பாதை 20 அடியாக சுருங்கியது கரையின் இருபுறமும் அளவீட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு

தேவாரம், ஜன. 29: கம்பம் பள்ளத்தாக்கில் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு செல்லும் நீர்வழிபாதைகள் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது. குறிப்பாக 100 அடி வரை அகலமாக இருந்த நீர்வழிபாதைகள் பல இடங்கள் 20 அடி வரை சுருங்கி உள்ளது. எனவே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழிப்பாதைகள் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணிர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகள், கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீர்ப்பாசனம் போன்றவற்றை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு போதிய அளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின.  அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைளையும் முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி எப்பொழுதும் குடிநீர் பஞ்சம் வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. சில இடங்களில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. எனவே இப்பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு நீர்நிலைகளை முறையாக அளந்து, உரிய முறையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனத்துக்கான முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போக, வறண்ட பிரதேசங்கள் நிறைந்த தென் தமிழகத்தின் 80 லட்சம் மக்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தபோது, 141.50 அடிக்கு குறையாமலும் தண்ணீரை நிலைநிறுத்தி, பெரியாறு அணை இன்னமும் பலமாகத்தான் உள்ளது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதி செய்ததோடு, அணையில் தமிழக உரிமையையும் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது. தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் ஜீவ ஆதாரமாக விளங்க கூடிய பெரியாறு அணையில் தற்போது 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களுக்காக பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மிக அதிகமான அளவில் வெளியேற்றப்படும் போது கூடலூர், கம்பம், சுருளிப்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம், குச்சனூர், சின்னமனூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக வைகை அணை வரை செல்கிறது.

பெரியாறு அணை செல்லும் தண்ணீர் செல்லும் நீர் வழிப்பாதைகள் முல்லையாற்று படுகைகள் என்று அழைக்கப்படுகிறது. அதிகமான அளவில் தற்போது குடிநீருக்காக ஆற்றுக்குள் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதை தவிர நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன.குறிப்பாக நீர்வழிப்பாதைகள் தொடங்கும் கூடலூர் முதல் வைகை வரை அதிகமான அளவில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக பெரியாறு செல்லும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விளைநிலங்களாகவும், விவசாய நிலங்களாகவும் அதிக அளவில் மாற்றப்பட்டுள்ளன.  இதேபோல் தென்னை மரங்கள், மா மரங்கள், உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படும் வருகிறது. இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ள நீர்வழிப்பாதைகள் பொதுப்பணித்துறையால் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்வழிப்பாதைகளை மீட்டெடுத்து முல்லையாற்றுப்படுகைகளின் நீளம், அகலங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கோடைக்காலங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம்

பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும், தண்ணீர் விவசாயத்திற்கும், குடிநீர்க்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஆற்றுப்படுகையின் அகலம் குறைந்தது 50 அடி முதல் 100 அடி வரை அகலமாக இருந்துள்ளது. ஆனால் இன்றோ நீர்வழிபாதைகளின் பல இடங்கள் 20 அடி வரை சுருங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் பல தடங்கல் ஏற்படுகிறது. குறிப்பாக மழை, வெள்ளகாலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதில் சிக்கல் உண்டாகிறது. முல்லையாற்றுபடுகையின் இரண்டு புறமும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான படுகைகள் அளவீடு செய்யப்பட வேண்டும்.

மழைக்காலங்களில் தடையின்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட வேண்டும். கோடைகாலங்களில் தண்ணீர் குறையும்போதுதான் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது. தண்ணிர் தடையின்றி செல்லும்போது விவசாயம் அதிகம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகிறது. ஒரு புறம் ஆற்றுப்படுகைகளின் இரண்டு புறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், மறுபுறம் பட்டா நிலத்தை இழந்த விவசாயிகளும் உள்ளனர். காட்டாற்று வெள்ளம், கனமழை பெய்தபோது, ஆற்றுப்படுகையில் இருந்து திசைமாறிய தண்ணீர் பெருக்கெடுத்து பட்டா நிலங்களையும் பதம் பார்த்தது. இதில் வயல்கள். தோட்டங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக மாறி விட்டதாகவும் புகார் உள்ளன என விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories: