×

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்கிற புதிய திட்டத்தை, பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் முதல்கட்ட ஆய்வு தொடர்பாக, வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ‘‘மக்களுக்காகத்தான் அரசு. மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அந்தவகையில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, முதல்வர், அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், வரும் பிப்.1ம் தேதி மற்றும் 2ம் தேதி ஆகிய 2 நாட்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, இந்த ஆய்வின்போது குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு மேற்க்கொள்ள உள்ளார். மேலும், ஆய்வின் முதல்நாளான பிப்.1 தேதியன்று, முதல்வர் விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளார்.

இதன்பின்னர், அன்று மாலை 4 மாவட்டங்களை சேர்ந்த எஸ்பிக்கள், டிஜஜி, ஐஜி (வடக்கு) ஆகியோருடன் மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அதேபோல, அன்றைய தினமே, மற்றொரு பகுதியாக, அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோர் மேற்கொண்ட 4 மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த, கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்.2ம் தேதி நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆலோசனை கூட்டத்தின்போது முதல்வர் முன்னிலையில், ஆய்வுகள் குறித்த முழு பொருண்மைகளும் விவாதிக்கப்படுகிறது. இதில், தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், முதல்வர் விரிவான ஆய்வினை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : CM ,Stalin ,Vellore , CM Stalin launches 'Chief Minister in Field Survey' program on Feb 1: 2-day tour and survey in Vellore
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...