×

முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் மற்றும் சி.இ.இ.டி.ஏ நுழைவு தேர்வு மார்ச் 25, 26ம் தேதி நடக்கிறது என்று அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், அதே போல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் மேல்படிப்புகளில் சேரலாம். இந்த நிலையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வருகிற மார்ச் மாதம் 25ம் தேதி நடக்க உள்ளது. ஆனால் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு நடத்தப்படும் ‘டான்செட்’ தேர்வுக்கு பதிலாக புதிய பெயரிலான நுழைவு தேர்வு நடக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,  டான்செட் என்ற பெயருக்கு பதிலாக, இனிமேல் சி.இ.இ.டி.ஏ., என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கான நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 26ம் தேதி நடத்தப்படும்.

இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நுழைவுத் தேர்வை எழுத http://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வு, தமிழ்நாட்டில் 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும், அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த சேர்க்கை முறையை மேற்கொள்ளலாம். சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கை செயல்முறைக்கும் இந்த நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணையும் பயன்படுத்தலாம்

* எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வருகிற மார்ச் மாதம் 25ம் தேதி நடக்க உள்ளது
* டான்செட் என்ற பெயருக்கு பதிலாக, இனிமேல் சி.இ.இ.டி.ஏ., என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

Tags : Dancet ,CETA ,Anna University , Dancet CETA Entrance Test on March 25th, 26th for Admission to Master's Courses: Anna University Notification
× RELATED இணையத்தில் வெளியீடு அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்