வேட்பாளரும் இல்ல, சின்னமும் இல்ல என்னத்த சொல்லி ஓட்டு கேக்க? எடப்பாடி அணி புலம்பல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் அதிமுகவில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் என்று முடிவாகவில்லை. வேட்பாளர் யாரென்றும் தெரியவில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் ஈரோட்டில் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது, உடனடியாக வீடு வீடாக சென்று நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உத்தரவிட்டுள்ளதோடு, நிர்வாகிகளுக்கு வாக்குசாவடி பட்டியல், வாக்காளர் பட்டியல்களை வழங்கி உள்ளார். தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பணிகளை சரியாக மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க தனக்கு நெருக்கமான ஆட்களையும் நியமித்துள்ளார். ஆனால், வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்கும் போது எந்த சின்னத்திற்கு வாக்கு கேட்பது? வேட்பாளர் யார் என எந்த விபரமும் இல்லாமல் எதைச் சொல்லி ஓட்டு கேட்பது? என்று தெரியாமல் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் புலம்புகின்றனர்.

* தற்போதைக்கு தனித்தே இறங்கி இருக்கோம்: செங்கோட்டையன் சொல்கிறார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் களத்தில் முடிவுகள் எப்படி வருகிறது என்பதை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும். எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்திக்கும் இத்தேர்தலானது, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை போல வெற்றியை தரும். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போதைக்கு அதிமுக இந்த தேர்தலில் தனித்தே களம் இறங்கி இருக்கின்றோம். அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 98 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் களத்தில் இறங்கி தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். இரட்டை இலை சின்னம் குறித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்திக்  கொண்டிருக்கிறார். எங்களுக்கே சின்னம் கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். பாஜ கூட்டணிக்கு வருவதையும், கூட்டணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: