வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 150 கிடா, 100 சேவல்களை வெட்டி 2,500 கிலோ அரிசியில் பிரியாணி: பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்

திருமங்கலம்: வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பொங்கல் திருவிழாவில் 150 கிடாக்கள் வெட்டி பிரியாணி பிரசாரம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை  இரண்டாம் வெள்ளி, மாசி இரண்டாம் வெள்ளி பொங்கல் திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் ஆட்டுக்கிடாய்கள், சேவல்களை பலியிட்டு, அசைவ பிரியாணி தயாரித்து கோயில் பிரசாதமாக விநியோகம் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் 88ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. முனியாண்டி சாமிக்கு, பக்தர்கள் கொண்டு வந்த பால் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.  

மாலை 5 மணிக்கு வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அலங்காரபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூ, மாலை, தேங்காய், பழம் ஏந்திய மலர்த்தட்டுகளை தலைச்சுமையாக எடுத்து கொண்டு நிலைமாலையுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இரவு 8 மணியளவில் நிலைமாலை சாமிக்கு சாற்றப்பட்டதையடுத்து அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 1 மணிக்கு சாமிக்கு சக்திகிடாய் பலியிடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள், 100 சேவல்களை பலியிட்டு, முனியாண்டி சாமிக்கு 2,500 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது. சாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. கள்ளிக்குடி, வில்லூர், திருமங்கலம், விருதுநகர், டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அசைவ பிரியாணியை வாங்கி சென்றனர். இத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: