யு-19 மகளிர் டி20 உலககோப்பை பைனல் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

போட்செஃப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 மகளிர் டி20 உலக கோப்பை பைனலில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழத்தி பைனலுக்கு முன்னேறின.

போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று மாலை 5.15க்கு தொடங்கும் பைனலில் இந்தியா - இங்கிலாந்து அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 2 அணிகளுக்கு மட்டுமின்றி,  யு-19 மகளிர் உலக கோப்பைக்கும் இதுதான் முதல் பைனல்.  அனுபவ வீராங்கனை ஷபாலி வர்மா தலைமையிலான இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சீனியர் இந்திய அணியில் விளையாடும் ஷபாலி, ரிச்சா கோஷ் இருவரும் முக்கிய தூண்களாக அணியை தாங்கி நிற்கின்றனர். இளம் வீராங்கனைகள் பர்ஷவி சோப்ரா, ஸ்வேதா ஷராவத், மன்னத் காஷ்யப், ஷவும்ஷா திவாரி, டைட்டஸ் சாது ஆகியோரும் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர். அதேபோல் கிரேஸ் ஸ்கரிவென்ஸ் தலைமையிலான இங்கிலாந்தும் தொடரின் சிறந்த அணியாக இருக்கிறது. இந்நிலையில், ஐசிசி நடத்தும் முதலாவது யு-19 மகளிர்  உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த இரு அணிகளும் நடப்பு தொடரில் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. அரையிறுதி வரை இந்தியா விளையாடிய 6 ஆட்டங்களில் 5ல் வென்றுள்ளது. தென் ஆப்ரிக்கா, அமீரகம், ஸ்காட்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 5 அணிகளை சாய்த்துள்ளது. ஒரு லீக் ஆட்டத்தில்ஆஸி.க்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

* இங்கிலாந்து அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று பைனலுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி  ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ருவாண்டா, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்தியுள்ளது.

Related Stories: