குற்றப் பதிவேட்டு பட்டியலில் இடம்பெற்ற வழக்கறிஞர் தொழில் செய்ய தடை: தமிழ்நாடு பார்கவுன்சில் அதிரடி நடவடிக்கை

சென்னை: குற்றப்பதிவேடு பட்டியலில் இடம்பெற்ற வழக்கறிஞர் சத்தியசீலன் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் டி.ேக.சத்தியசீலன். வழக்கறிஞராக கடந்த 2014ல் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் மீது 9 குற்ற வழக்குகளும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் இவருக்கு வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த 2010ல் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்குகளை மறைத்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார் என்று தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு புகார் வந்தது. மேலும், அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்ற பதிவேட்டில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.இந்த புகாரை ஆய்வு செய்த தமிழ்நாடு பார்கவுன்சில் இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டது. விசாரணை முடிவில், சத்தியசீலனுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருப்பதாக அறிவித்து அவர் இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும், தீர்ப்பாயங்களிலும் தொழில் செய்ய கூடாது என்று தடை விதித்து பார்கவுன்சில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: