×

கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியில் ஒப்புயர்வு மைய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கே.கே.நகரில் செயல்படும் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில், ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில், 60 படுக்கைகள் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் உறுப்பு துண்டித்தல் ஆகிய மூன்று உள்நோயாளிகள் பிரிவுகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன.

இம்மருத்துவமனையில் நாள்தோறும் 250 புறநோயாளிகளும், 30 உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியே 40 லட்சம் செலவில் ஒப்புயர்வு மையம் கட்டப்பட்டது. இதை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ஒப்புயர்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பயிற்சி வசதிகள், இயன்முறை பயிற்சி, மின்முறை சிகிச்சை ஆகியவற்றை பார்வையிட்டு, அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருவிகளையும் பார்வையிட்டார்.  

இப்புதிய ஒப்புயர்வு மையத்தின் மூலம் 60 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், மூளைக் காயம், பெருமூளை வாதம், தசைக்கூட்டு கோளாறு நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, எம்எல்ஏ., ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ் குமார், நிலைக்குழு தலைவர் க.தனசேகரன், மாற்றுதிறனாளிகள் நல வாரிய உறுப்பினர் ரெ.தங்கம், நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இப்புதிய ஒப்புயர்வு மையத்தின் மூலம் 60 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், மூளைக் காயம், பெருமூளை வாதம், தசைக்கூட்டு கோளாறு நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : 28 Crore Comparison Center Building ,KK Nagar Government Rehabilitation Hospital ,Chief Minister ,M K Stalin , 28 Crore Center Building at KK Nagar Government Rehabilitation Hospital: Chief Minister M K Stalin inaugurated
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...