×

இரட்டை இலை சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நாளை தீர்வு கிடைக்குமா? தீர்ப்புக்கு பின் வேட்பாளரை அறிவிக்க இபிஎஸ், ஓபிஎஸ் அணி திட்டம்

சென்னை: அதிமுகவுக்கு உரிமை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், தற்போது இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. அன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதால், தீர்ப்புக்குப் பின்னரே வேட்பாளரை அறிவிக்க இரு அணியினரும் முடிவு செய்துள்ளனர். அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை, கட்சி சின்னம் குறித்து உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களுக்குத்தான் அதிமுக சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. இதற்காக, இருவரும் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில்தான், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், எடப்பாடி அணி போட்டியிட முடிவு செய்தது. இதற்காக பாஜவிடம் ஆதரவு கேட்டது. அவர்களும் ஆதரவு கொடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு கேட்டு நின்றார். அவரும் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். இல்லாவிட்டால் பாஜவே போட்டியிட வேண்டும். நாங்கள் ஆதரிக்கத் தயார் என்று கூறிவிட்டார். பாஜ போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்று புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக் கழகம் ஆகியவையும் அறிவித்துள்ளன. இதனால் எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜவும் எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது.

ஓரளவு செல்வாக்கு உள்ள எடப்பாடி அணியை ஆதரிப்பதா அல்லது எப்போதும் தனக்கு ஆதரவாக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதா என்ற குழப்பம் நீடித்து வருவதால், யாருக்கு ஆதரவு என்பதை சொல்ல முடியாமல் அமித்ஷா தவித்து வருகிறார். இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விடலாமா என்றும் பாஜவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவில் இரு அணியினரும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், இரட்டை இலை முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீரிக்க வேண்டும். இதனால் உச்ச நீதின்றத்தின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும். மேலும், தற்போதைய நிலையில் நான்தான் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதால், எனக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. வருகிற 30ம் தேதி அதாவது திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது.

அதில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அல்லது தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது என்று எண்ணத்தில் உள்ளார். இதற்காக 30ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார். உச்ச நீதின்றம் தீர்ப்பு வந்த பிறகே, தனது அணி வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் பாஜவின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரும் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து சிக்கலும், இழுபறியும் நீடிக்கிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு தலைவர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், சுப்புரத்தினம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் நேற்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் உச்ச நீதின்ற விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஈரோட்டில் உள்ள ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். நேற்று (3வது நாளாக) காலையிலும் ஆலோசனை நடத்தினார். இருவருமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. சின்னம் இல்லை. எப்படி ஒரு மாதத்தில் மக்களை சந்திப்பது என்று அதிமுகவில் இரு அணியினரும் குழப்பம் அடைந்துள்ளனர். தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். அதிமுக தலைவர்களும் கடும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

Tags : Supreme Court ,EPS ,OPS , Will the case be resolved tomorrow in the Supreme Court asking for the double leaf symbol? EPS, OPS team plan to declare candidate after adjudication
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...