×

ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி ராஞ்சியில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் நாட்அவுட்டாக 59 (30 பந்து), டெவோன் கான்வே 52 (35 பந்து), ஃபின் ஆலன் 35 ரன் அடித்தனர். 20 ஓவரில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 176ரன் எடுத்தது. இந்திய பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில், இஷான்கிஷன் 4, சுப்மான் கில் 7 ரன்னில் வெளியேற திரிபாதி டக்அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 47 (34பந்து), ஹர்திக்பாண்டியா 21 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்னில் கடைசி ஓவரில் அவுட் ஆனார். 20 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து பவுலிங்கில், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், லாக்கி பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டேரில் மிட்செல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று யாருமே கணிக்கவில்லை. இரண்டு அணிகளுமே ஆடுகளம் செயல்பட்டது குறித்து ஆச்சரியம் தான் அடைந்தோம். நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக விளையாடியது. அதனால் தான் அவர்கள் இன்று வெற்றி பெற்றார்கள். பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக திரும்பியது. சுழற்பந்துவீச்சு திரும்பிய விதமும் பவுன்ஸ் ஆன விதமும் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. நாங்கள் முதலில் ரன்கள் கொடுத்தாலும் பிறகு சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தினோம். நானும் சூர்யாவும் பேட்டிங் செய்யும் வரை இலக்கை எட்டி விடலாம் தான் என்று நினைத்தோம்.

நாங்கள் பந்துவீச்சில் கடைசி கட்டத்தில் மிகவும் மோசமாக செயல்பட்டோம். கூடுதலாக 25 ரன் கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எங்கள் பவுலர்கள் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான செயல்பாட்டை காட்டினார். இவரும் அக்சர் படேலும் தொடர்ந்து இப்படியே சிறப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பயனைத் தரும், என்றார்.

வெற்றிக்கு பின் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியதாவது: 2வது இன்னிங்சில் பந்து இந்த அளவு சுழன்றது சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஒருநாள் தொடரில் நிறைய ரன்கள் கொடுத்த நிலையில் இன்று, பந்து திரும்புவதைப் பார்க்க நன்றாக இருந்தது. 176 ரன் பாதுகாப்பான ஸ்கோர் என நாங்கள் நினைக்கவில்லை. டேரில் மிட்செல் நன்றாக பேட்டிங் செய்தார், என்றார்.
இந்த வெற்றி மூலம் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்க 2வது டி.20 போட்டி நாளை லக்னோவில் நடைபெற உள்ளது.

Tags : Hardik Pandya , 1st T20 match, giving away 25 extra runs was the reason for defeat, Hardik Pandya interview
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு