×

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 விமானங்கள் விழுந்து நொறுங்கியது: ஒரு விமானி பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

போபால்: ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து நடந்த 3 விமானங்கள் விழுந்த விபத்தில், ஒரு விமானி பலியானார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை பயிற்சிக்காக  சுகோய்-30 மற்றும் மிராஜ்-3000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன.

இந்த விமானங்கள் மொரீனா அடுத்த பஹத்கர் பகுதியில் இன்று காலை, அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. வயல்வெளிகளில் விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானதால், சம்பவ இடத்திற்கு கிராம மக்கள் விரைந்தனர். இரண்டு விமானங்களும் தீப் பிடித்து எரிந்தன. தகவலறிந்த மீட்புக் குழுவினர் தீப்பற்றி எரிந்த விமானத்தை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இதுகுறித்து மொரேனா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராய் சிங் நர்வாரியா கூறுகையில், ‘சுகோய்-30 மற்றும் மிராஜ்-3000 ஆகிய இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. இந்த விமானங்களில் பயணம் செய்த மூன்று விமானிகளில் இருவர் பாதுகாப்பாக உள்ளனர். மூன்றாவது விமானி இருக்கும் இடத்தை தேடி வருகிறோம். இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் தேடி வருகிறது’ என்றார்.

மேற்கண்ட இரண்டு விமானங்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதா? அல்லது வேறு காரணங்களால் விபத்தில் சிக்கியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒரு விமானியை மீட்புக் குழுவினர் தேடி வருவதால் அவர் விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட பதிவில், ‘மொரீனா அடுத்த கோலாரஸில் இந்திய விமானப்படையின் சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசு போதிய ஒத்துழைப்பை அளித்து வருகிறது. விமானத்தின் விமானிகள் பத்திரமாக இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இன்று காலை, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ஹெலிகாப்டர் விழுந்ததாக கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் பரத்பூர் மாவட்டத்தின் உஜ்ஜைன் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமானமும் வயல்வெளியில் விழுந்ததால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கூறுகையில், ‘பரத்பூரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், விபத்தில் சிக்கியது ஹெலிகாப்டரா அல்லது விமானமா என்பது உடனடியாக தெரியவில்லை. மேற்கண்ட இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து இந்திய விமானப்படைத் தலைவர், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்ததாகவும், மீட்புப் பணிகள் குறித்தும் அறிக்கை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tags : Rajasthan, Madhya Pradesh , Rajasthan, Madhya Pratham, 3 planes crash, one pilot killed, Air Force Information
× RELATED தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது...