×

திருவெற்றியூரில் 600 ஆண்டுகள் பழமையான மாதவ பெருமாள் கோயில் கட்டப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் 600 ஆண்டு பழமையான மாதவ பெருமாள் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரபலமான இக்கோயிலுக்கு முன்பே திருவெற்றியூர் புதுப்பையூர் கிராமத்தில் மிகவும் பழமையான மாதவப் பெருமாள் கோயில் சிறப்பு பெற்று விளங்கியுள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு 2 முறை திருவிழாவும் நடந்துள்ளது. பழமையான இக்கோயில் காலப்போக்கில் இடிந்து பழுதடைந்து விட்டது. இதனால் இக்கோயிலின் உள்ளே இருந்த மாதவப் பெருமாள் சீதேவி மற்றும் பூதேவி சிலைகளை பாதுகாக்கும் வகையில் பாலாலயம் செய்து சிலையை கோயிலின் உள்பகுதியில் உள்ளே வைத்து சிறிய கொட்டகை அமைத்து வைத்துள்ளனர்.

மேலும் கோயில் புதுப்பித்து கட்டுவதற்காக வானம் தோண்டும் போது 2 அடி உயரம் உள்ள மூன்று ஐம்பொன் சிலைகள் கிடைத்தது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அந்த சிலைகளை மீட்டு பாதுகாப்பாக தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு எந்த பணியும் நடக்கவில்லை பாலாலயம் மட்டும் நடந்தது. இங்குள்ள சிலைகள் வெயிலிலும் மழையிலும் கிடப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். மேலும் ஒரு காலத்தில் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்று திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளது. உற்சவ சாமிகள் ஐம்பொன்னால் ஆன சிலைகள் இருந்துள்ளது இக்கோயிலுக்கு முன்பாக உள்ள காலி இடத்தில் திருவிழா நடத்தி வந்துள்ளனர். அந்த இடத்திற்கு பெயர் கூத்தாடி பொட்டல் என இன்றும் மக்களால் அழைக்கப்படுகிறது அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த இந்த கோயில்முற்றிலும் தரைமட்டமாக இடிந்து போய் கிடக்கிறது.

கோயில் இருந்த இடம் தரை மட்டமாக புல் மண்டி கிடக்கிறது சாமி சிலைகளும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் அங்குள்ள மக்கள் வழிபட முடியாமல் மன வேதனை அடைந்துள்ளனர். இந்த ஊரில் உள்ள பாகம்பிரியாள் அம்மன் சித்திரை திருவிழாவில் திருவெற்றியூரில் இருந்து இந்தக் கோயில் அமைந்துள்ள மற்றொரு குடியிருப்பு பகுதியான புதுப்பையூரில் சுவாமி புறப்பாடு நடந்து, இங்கிருந்து கரகம் எடுத்து பெண்கள் செல்வது இன்றளவும் நடந்து வருகிறது.எனவே இத்தகைய புகழ்பெற்ற கோயிலை அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருவெற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘‘மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது காலப்போக்கில் கட்டிடம் இடிந்து முழுவதுமாக அகற்றப்பட்டு சிலைகளை பாலாலயம் செய்து கோயில் இருந்த இடத்துக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த கட்டுமான பணியும் நடைபெறவில்லை வெயில் மழை போன்ற இயற்கை தாக்குதல்களால் இந்த சிலைகள் பாதிக்கப்பட்டு வருகிறது எனவே பழமை வாய்ந்த கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Mathava Perumal Temple ,Thiruvettriur , Will the 600-year-old Madhava Perumal temple be built in Tiruvettiyur? Devotees expect
× RELATED திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ரூ.27 லட்சம் உண்டியல் வசூல்