சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: 2022-23ஆம் நிதியாண்டு நிறைவு பெற இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை  உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சொத்துவரியானது, பெருநகர சென்னை மாநகாரட்சியின் பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு  தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது  சுகாதாரம், நோய்த்  தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்துவரி பொது சீராய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஏற்று, 7 இலட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை முழுமையாக செலுத்தி சென்னை மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில்  பங்கேற்றுள்ளனர்.

பொது சொத்துவரி  சீராய்வினை எதிர்த்து, 200க்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது 23.12.2022 நாளிட்ட தீர்ப்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில்  மேற்கொள்ளப்பட்ட சொத்துவரி பொது சீராய்வினை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள், ஒவ்வொரு அரையாண்டுகளின் தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு  வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியானது, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்துவரியினை செலுத்தும் வகையில் கீழ்கண்ட வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் அரசு தபால் துறை ஊழியரிடம் செலுத்துவதற்கும் மற்றும் வரிவசூலிப்பாளரிடம் காசோலை / வரைவோலை மற்றும் கடன் / பற்று அட்டைகள் வாயிலாகவும், பெருநகர சென்னை  மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மேலும், தங்களது  இல்லங்களில் இருந்தபடியே சென்னை மாநகராட்சி  இணையதளம்  மற்றும் பே.டி..எம். (Paytm), நம்ம சென்னை ஆகிய கைபேசி  செயலிகள் மூலம் பரிமாற்ற கட்டணம் ஏதுமில்லாமலும், பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS), NFFT/RTGS ஆகிய  முறைகளிலும்  எளிதாக  செலுத்த  இயலும்.

2022-2023ஆம் நிதியாண்டில் சொத்துவரியினை சில சொத்து உரிமையாளர்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். 2022-2023 ஆம் நிதியாண்டு நிறைவு பெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: