உடுமலை பகுதியில் காணப்படும் நடுகற்கள் பறைசாற்றும் வரலாறு

உடுமலை:உடுமலை நரசிங்காபுரம், அருணாசலேஸ்வரர் பஞ்சாலைக்குப் பின்புறம் கருப்புசாமி புதூருக்குச் செல்லும் சாலையின் இடது புறத்தில் பாரம்பரியம் மிக்க கோயில்கள், நடுகற்கள் இருப்பதை அறிந்த உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் அங்கு ஆய்வு செய்தனர். அங்கு கட்டிடத்திற்குள் இருக்கும் நடுகற்களைக் கன்னிமார் சாமி என்றும், அதற்கு அருகில் எலந்தை மரத்தின் அடியில் இருக்கும் நடுகற்களை வீரமாத்தி அம்மன் என்றும், எதிரில் இருக்கும் பெரிய அளவிலான சுமார் 5 அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட நினைவு நடுகற்களை  மாலையம்மன் என்றும் மாலையாத்தா என்றும் அந்தப் பகுதி மக்கள் சொல்கின்றனர்.இக்கோயிலில்  உடுமலை பெதப்பம்பட்டி அருகில் உள்ள பொட்டையம்பாளையம், எஸ்.அம்மாபட்டி, ஆனைமலை, மொடக்குப்பட்டி, மரிக்கந்தை போன்ற பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட சமுதாய மக்கள்  தைத் திங்களில் வந்து பொங்கல் வைத்து வழிபட்டு செல்வதாகவும்,  இந்தப் பகுதி மக்கள்  அமாவாசை, பௌர்ணமி நாட்களில்  சிறப்பு பூசைகள் செய்து வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்  விஜயலட்சுமி,மதியழகன், ஜெ.கிருஷ்ணாபுரம்  அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியர் செ.ராபின் ஆகியோர் கூறியதாவது:  நடுகல் வழிபாடு என்பது  கொங்கு நாட்டில் பண்டைய மக்கள் இனக்குழுக்களாகவே வாழ்ந்து கால்நடைகளை சொத்துக்களாகவே வளர்த்து வந்துள்ளனர். இந்த இனக்குழுக்களின் பிரிவுகளிடையே மற்றொரு குழுவினர் கால்நடைகளை கவர்ந்து செல்வதும், மற்றொரு குழு கவர்ந்து சென்ற கால்நடைகளை  வீரம் செறிந்த மறவர்கள்  மீட்டு வரும் பழக்கங்கள் நடைமுறையில் இருந்துள்ளன. இந்த கால்நடை மீட்பு போர்க்களத்தில்  வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு நடுகற்கள் எடுக்கப்படும் நடைமுறை மேய்ச்சல் நிலங்களான  தென் கொங்கு மண்டலத்தில் இருந்துள்ளது. மேலும் சப்தமாதர் கற்சிற்பங்கள் உரம்பூரிலிருந்து எடுத்துச் சென்று கோவை அகழ் வைப்பகத்தில் இருப்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவு கொள்ள வேண்டும். மேலும் இறந்து போன வீரர்களுக்கு  ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது பண்டைய தமிழ் மரபு ஆகும்.

இவ்வாறு நடப்பட்ட கற்களே நடுகல் என்று பொதுவான சொற்களால் வழங்கப்படுகிறது. வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர்  நினைவாகவும் நடுகல் நடும் வழக்கம்  ஈழத்திலும், தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளில்  நிலவிய தொன்மையான வழக்கம் ஆகும்.  நடுகற்களின் அமைப்பு: பொதுவாக நடுகற்களில் மன்னன் பெயர், ஆட்சியாண்டு உயிர் நீத்த வீரன் பெயர்  செய்திகள், போர், நிரை கொண்டது நிரை மீட்டது, எதனால் வீழ்ந்தான் என்பன போன்ற குறியீடுகள் இருக்கும். ஆனால் இங்கு இருக்கும் நடுகற்களில் அவ்வாறான குறியீடுகள் இல்லை. அந்தப் பகுதி மக்களைக் கேட்டபோது புடைப்புச் சிற்பங்கள் இருந்த நான்கடிக்கும் உயரமான நடுகற்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் சிதிலமடைந்ததாகவும் கூறுகின்றனர்.  நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசை செய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனை சங்க இலக்கிய நூல்களும் குறிப்பிடுகின்றன. ஒரு சில வழித்தடத்தில் இருக்கும் கோயில்களை பதுக்கைக் கோயில்கள் என்றும் அழைப்பர். இது பொதுமக்கள் செல்லும் வழித்தடத்தில் அல்லது பொதுமக்கள் கூடுமிடத்தில் இருக்கும். இந்தக் கோயிலும் நரசிங்காபுரத்திலிருந்து கருப்புசாமி புதூர் செல்லும் வழித்தடத்தில் உள்ளது. இதுகுறித்து சங்க இலக்கியத்தில்,

    இல்லடு கள்ளின்  சில்குடிச் சீறூர்ப்

    புடைநடு  கல்லின்  நாட்பலியூட்டி

    நன்னீராட்டி நெய்நறை கொளீஇய

    மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் என்று பாடப்பட்டுள்ளது.

நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும். மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும். அதனால் வறட்சி மிக்க இக்கொடிய வழியல் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும். வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்து வந்துள்ளது. கொங்கு பகுதியில் நடுகல் வழிபாடு குறித்து உடுமலை வரலாற்று நூலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: