×

ஆக்கிரமிப்பின் பிடியில் பழநி சண்முகநதி ஆறு: பக்தர்கள் அவதி

பழநி: பழநி சண்முகநதி ஆறு ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதால் பக்தர்கள் அவதியடைகின்றனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர். இவர்களில் பெரும்பாலானோர் பழநி பகுதியில் புண்ணிய நதியாக கருதப்படும் சண்முகநதி ஆற்றில் நீராடுவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக சண்முகநதி கரையில் கோயில் நிர்வாகம் சார்பில் முடிக்காணிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஷவர் வசதியுடன் கூடிய இலவச குளியலறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சண்முகநதி கரையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்பு கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறு, சிறு கொட்டகைகளாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்பு கடைகளில் பக்தர்களுக்கு சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட குளியல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தொடர்ந்து பக்தர்கள் குளிப்பதற்கு கட்டண அடிப்படையில் வெந்நீர் வைத்து தரப்படுகிறது. தவிர, ஆற்றில் குளிக்க செல்லும் பக்தர்களை, ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் அங்குமிங்கும் அலைகழிப்பதாக புகார் எழுந்துள்ளது. தைப்பூசத் திருவிழா நாளை ஜன.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. எனவே, பொதுப்பணி துறை மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து தைப்பூச திருவிழா காலம் துவங்குவதற்குள் சண்முகநதி ஆற்றின் கரையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani Salmukhanati Six , Palani Shanmukanadi river in the grip of occupation: Devotees suffer
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி