சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தாய்-சேய் நல வாகனம் வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நல வாகனம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், விருதுநகர், அருப்புகோட்டை, சாத்தூர் ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில், ராஜபாளையத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை உள்ளது. திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்காக ரூ.7 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சிவகாசி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. மாவட்டத்தில் 7 அரசு மருத்துவமனைகளுக்கு 3 தாய் சேய் நல வாகனங்கள் மட்டுமே உள்ளன. பிரசவ கால மருத்துவ சேவையில் தாய்சேய் நல வாகனங்கள் மக்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் சிவகாசியில் உள்ள தாய் சேய் நல வாகனம் காலவாதியானதால் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாய் சேய் நல வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை. இதனால், பிரசவத்திற்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர். மேலும், அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலவாகனம் இல்லை என்றால் ரூ.250 போக்குவரத்து செலவுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பணமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, சிவகாசி அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல வாகனத்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘தாய் சேய் வாகன பயன்பாட்டின் காலக்கெடு முடிந்ததால் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது புதிய தாய் சேய் வாகனம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு பயண செலவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: