ஜி.என்.செட்டி சாலையில் வேகமாக சென்றபோது மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து மருத்துவ மாணவி படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் அதிவேகமாக சென்று கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில், காரை ஓட்டி வந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவி படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வர்ஷூ (22). இவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். தொழிலதிபர் மகளான வர்ஷூ, எப்போதும் காரில் தான் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை வழக்கம்போல் காரில் கல்லூரிக்கு புறப்பட்டார்.

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் வர்ஷூ காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த மாணவி வர்ஷூ காருக்குள் சிக்கி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து உடனே பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி வர்ஷூவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாணவி வர்ஷூவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஜி.என்.செட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: