காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தது அம்பலம்: காதலனுக்கு தீவிர சிகிச்சை

ஆலந்தூர்: பரங்கிமலையில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்த விவகாரத்தில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது காரணம் என தெரியவந்துள்ளது. காதலி தலை துண்டித்து உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து ஒரு மின்சார ரயில், நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் பரங்கிமலை ரயில்நிலையம் அருகே சென்றபோது, காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி, ரயில் முன்பு பாய்ந்தது. இதில், இளம்பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், படுகாயமடைந்த வாலிபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த இளம்பெண் உள்ளகரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் சிங் என்பவரின் மகள் சிம்ரன் (15) என்பதும், இவர் மடிப்பாக்கத்தில்  உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்ததும், படுகாயமடைந்த வாலிபர், உள்ளகரம் நாவலர் தெருவை சேர்ந்த இளங்கோ (20) என்பதும், இவர், மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

இவர்கள் இருவரும் காதலித்து வந்ததும், இதற்கு அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இளங்கோ தனது பிறந்தநாளை காதலியிடன் கொண்டாட வெளியே வந்துள்ளார். அப்போது, தங்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்ற வேதனையடைந்து, ரயில் முன் பாய்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: