×

போலிகளையும், துரோகிகளையும் நம்பக்கூடாது உண்மையான ஆவண படத்திற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அயோத்திப்பட்டிணம்: ‘உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சேலம் மாசிநாயக்கன்பட்டியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் 26,649 பேருக்கு ரூ.221.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர்  பேசியதாவது: ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 70 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் முதல்வர்.  முதல்வரின் காலை உணவு திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1.16 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றன.

இன்னும் 3 ஆண்டுகளில் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளார். நமது முதல்வர் பொறுப்பேற்ற போது இந்தியாவின் நம்பர்1 முதல்வர் என்று அனைவரும் பாராட்டினர். ஆனால் மாநிலத்தை இந்தியாவின் நம்பர்1 என்று மாற்றுவேன் என்றார் முதல்வர். இதை பத்திரிகை சர்வேக்கள் உறுதி செய்துள்ளது. தற்போது இந்தியாவில் நம்பர்1 மாநிலம் தமிழ்நாடு என்றால் அதற்கு முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும்தான் காரணம். மிகச்சிறப்பாக அரசு நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் எதிர்கட்சிகள் விமர்சனம் செய்ய வழியில்லாமல் போய்விட்டது. அதனால் வெற்று விளம்பரத்திற்காக பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர்.

இதுபோன்ற அவதூறுகளை கண்டு கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு சிலர், தங்களை பற்றிய உண்மையான ஆவணப்படம் வந்ததற்கே, பயந்து போய் அதனை தடை செய்து கொண்டிருக்கிறார்கள். இதேபோல் சமரசமும் செய்யாமல், அடிமைத்தனமும் இல்லாமல் சிறப்பான, சுயமரியாதை உள்ள, அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையுடன் இயங்குவதுதான் நம்முடைய ஆட்சி. சிறப்பான திராவிட மாடல் அரசு என்றென்றும் உங்களுக்கு துணை நிற்கும். எனவே போலிகளையும், பொய்யர்களையும், துரோகிகளையும் நம்பி ஏமாறாமல் என்றும் இந்த அரசுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags : Minister ,Udayanidhi Stalin , Fakes and traitors should not be trusted Real documentaries are being banned out of fear: Minister Udayanidhi Stalin's speech
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...