வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுவடைந்தது கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் நேற்று காலையில் வலுப்பெற்று காற்றழுத்த  தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்கு மற்றும் அந்தமானுக்கு தெற்கு கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம், நேற்று காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதையடுத்து, நேற்று காலை 8.30 மணி அளவில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலை கொண்டது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அல்லது நாளை மேலும் வலுப்பெற்று மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 31ம் தேதியில் அது மேலும் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்வின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று  லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறைந்த பட்ச வெப்ப நிலை இயல்பைவிட 3 டிகிரி குறைவாக இருந்தது.

மேலும், 29ம் தேதி வட  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். இதையடுத்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: