×

குட்கா, பான்மசாலாவுக்கு விதித்த தடை உத்தரவு ரத்து எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழ்நாடு அரசு முடிவு

* தடையை உறுதி செய்ய சட்ட விதிகளில் திருத்தலாமா, புதிய சட்டம் இயற்றுவதா?
* சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை  எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்நாடு  அரசு  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அதாவது, உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு  ரத்து  செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.  உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம், 2006ன் பிரிவு 30(2)(a)ன் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆண்டுதோறும் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குட்கா, பான்மசாலா விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு, இந்த உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தற்போது, இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு அதனுடைய தீர்ப்பில், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில், புகையிலைப் பொருட்களை விளம்பரப் படுத்துவதையும், முறைப்படுத்துவதைப் பற்றியும் தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை என்னும் கருத்து தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. எனினும், அதே தீர்ப்பில் புகையிலை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் இந்த விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும் தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் ஆகும். உச்ச நீதிமன்ற சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய  முடிவு  செய்துள்ளது. அதே நேரத்தில் தடையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம், விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை  இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும் தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் ஆகும்.

Tags : Supreme Court ,Gutka ,Panmasala ,Tamil Nadu Govt , Appeal in Supreme Court against annulment of ban on Gutka, Panmasala: Tamil Nadu Govt.
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு