×

மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் திருப்தியளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் விலைக்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம்.  காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த வேண்டும்.  

கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கு காலியிடத்தை கண்டறிவது, ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பிரச்னைகள் உள்ளதால், பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த இரு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தமிழ்நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் உள்ள 163 கடைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 78 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வேலூரில் 98 சதவீதமும், திண்டுக்கல்லில் 91 சதவீதமும், தர்மபுரியில் 99 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 98 சதவீதமும் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த திட்டம் அமல்படுத்துவதில் அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது. பாட்டில்களை அடையாளம் காண க்யூ ஆர் கோடு முறையை பயன்படுத்தலாம். திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கோவை, பெரம்பலூரில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : ICourt ,Tamil Nadu government , ICourt praises Tamil Nadu government's plan to take back empty liquor bottles in hilly areas
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...