பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான புத்தொழில் நிதித் திட்டம் தொடக்கம்: பயனாளிகளுக்கு முதலீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான புத்தொழில் நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதலீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்ட தொடக்க நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 5 புத்தொழில் நிறுவனங்களில் 7.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை வழங்கினார்.

புதுயுக தொழில் முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக ‘தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்’ என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோர்களால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும்.

இந்நிதியத்திற்கு, முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022லிருந்து தொழில்முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பித்தவர்களில் இருந்து, தொழில்முனைவு வழிகாட்டுநர்கள், அரசு அலுவலர்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய தகுதியான நடுவர் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியான 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மொத்தம் 7.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: