சென்னை: சமூக நீதி கொள்கையால் தான், உயர்கல்வி, மருத்துவத் துறை, உற்பத்தி என பல நிலைகளில், குஜராத்தை விட தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ‘ஜனநாயகம் மற்றும் சமூக நீதி ஒருமித்த கருத்து மற்றும் சர்ச்சைகள்’ குறித்த கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடந்த கருத்தரங்கத்தின் தொடக்க விழாவுக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி முன்னிலை வகித்தார். விழாவில் கருத்தரங்கம் குறித்த நூலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: திமுக தலைமையிலான அரசு பதவியேற்கும் போது பல்வேறு நிதி நெருக்கடி இருந்தது. ஆனால் அதையெல்லாம் தற்போது சரிசெய்து வருகிறோம். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை குறைத்து இருக்கிறோம். இந்த ஆண்டும் கணிசமான அளவுக்கு வருவாய் பற்றாக்குறை குறையும். நிதி வேண்டும் என்றால், அது தொடர்பாக பல்வேறு கேள்விகளை நாங்கள் முன்வைக்க தான் செய்வோம். அதற்கு சரியான பதில்கள் கிடைத்தால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும்.
சமூக நீதி கொள்கையால் தான், உயர்கல்வி, மருத்துவத் துறை, உற்பத்தி என பல நிலைகளில், குஜராத்தை விட தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. சமூக நீதி கொள்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக நீதி கோட்பாடுகளால் ஏற்படும் பலன்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான் சமூகத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நாம் உணர முடியும். இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். சமூக நீதி கொள்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக நீதி கோட்பாடுகளால் ஏற்படும் பலன்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
