வடக்கு சோமாலியா குகையில் பதுங்கியிருந்த ஐஎஸ் நிதிப்பிரிவு தலைவன் உட்பட 10 பேர் பலி: அமெரிக்கப் படைகள் அதிரடி

நியூயார்க்: வடக்கு சோமாலியாவின் குகையில் பதுங்கியிருந்த ஐஎஸ் நிதிப்பிரிவு தலைவன் உட்பட 10 பேரை அமெரிக்க ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்கள் தங்களது இருப்பை வெளிப்படுத்தும் வகையில், ஆப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் கிளைகளை அமைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐஎஸ் அமைப்பின் நிதிப் பிரிவு குழுவின் தலைவராக பிலால் அல் சூடானி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் வடக்கு சோமாலியாவில் முகாமிட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். அதையடுத்து அமெரிக்க ராணுவம் தலைமையிலான கூட்டு ராணுவ படைகள் வடக்கு சோமாலியாவில் உள்ள குகைக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் நோக்கி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பிலால் அல் சூடானி உள்ளிட்ட 10 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பிலால் அல்-சூடானி உள்ளிட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க ராணுவத்தை பாராட்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: