பழநி: குடமுழுக்குகளை தமிழிலே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (27.01.2023) நடைபெற்ற பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த பின், மீண்டும் அத்திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திருப்பணிகள் மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குடமுழுக்குகள் நடைபெற்று வருவதை அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
அந்த வகையில், கடந்த 03.04.2006 அன்று குடமுழுக்கு நடைபெற்று 14 ஆண்டுகள் 10 மாதங்கள் முடிந்த நிலையில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு இன்றைய தினம் வெகுவிமரிசையாக, மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கூட பாராட்டுகின்ற அளவிற்கு, திட்டமிடலோடு சிறந்த முறையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இறையன்பர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி கொள்கின்ற வகையில் ஒரு நல்ல சூழலை இன்றைக்கு உருவாக்கி தந்திருக்கின்றோம். பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கில் பங்கேற்று தரிசனம் செய்திட ஆன்லைன் மூலம் 52 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2000 நபர்களுக்கு தான் இன்றைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஏனென்றால் குடமுழுக்கை காணும் வகையில் திருக்கோயிலின் மேல் தளத்தில் 6000 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு உறுதித்தன்மை உள்ளதாக பொதுப்பணித்துறையினர் சான்றளித்ததால் அதற்கும் அதிகமான நபர்களை திருக்கோயிலுக்கு மேல்தளத்தில் அனுமதிக்க முடியவில்லை. அதே சமயம் திருக்கோயிலை சுற்றி 16 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசிக்கின்ற அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. யாகசாலையில் சுமார் 90 அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு மட்டும் 33 அக்னி குண்டங்களில் அர்ச்சனைகள், வேள்விகள் நடத்தப்பட்டன. அதேபோல் மலைப் பாதையில் புதிதாக 18 நிழல் மண்டபங்கள் உருவாக்கப்பட்டன.
திருக்கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. அதேபோல் திருக்கோயிலைச் சுற்றிலும் இருக்கின்ற அனைத்து சன்னதிகளின் உச்சி கலசத்திற்கும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. குடமுழுக்கின் போது 108 ஓதுவார்களை கொண்டு தமிழிலேயே மந்திரங்கள், திருமுறை, திருப்புகழ், கந்த சஷ்டி கவசமும் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒலிக்கப்பட்டன. இன்றைக்கு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முழுமையாக தமிழ் மந்திரங்கள் ஒலிக்க நடைபெற்றது. இத்தகைய சிறப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த குடமுழுக்கை இறையன்பர்கள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியடையும் அளவிற்கு நடத்தியதில் இந்து சமய அறநிலையத்துறை பெருமிதம் கொள்கிறது.
திருக்கோயில் குடமுழுக்கின் போது தமிழில் மந்திரங்களை ஓதுவதற்கு தமிழிலே குடமுழுக்கு நடத்துவதற்கு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன்படி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சக்திவேல் முருகனார், பேரூர் ஆதீனம் போன்ற சான்றோர்கள், மடாதிபதிகளை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழில் எப்படி எல்லாம் குடமுழுக்கு நடத்தலாம் என்பதற்கு விரைந்து பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள். அது கூடிய விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசாணையாக வெளியிடப்படும். தமிழில் அர்ச்சனை செய்திட அர்ச்சகர்களுக்கு பயிற்சிப் பள்ளி அமைத்தது போல தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையை பெற்று, குடமுழுக்குகளை தமிழிலே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பயிற்சிப் பள்ளி வெகு விரைவில் தொடங்கப்படும்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 444 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்றைக்கு மட்டும் சுமார் 31 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கின்றது. அதேபோல் 2023 ஜனவரி 26 முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் 179 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் 1,000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையான 104 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள 100 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் வசிக்கின்ற பகுதியில் அமைந்திருக்கின்ற திருக்கோயில்கள் என மொத்தம் 2,500 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் ரூபாய் 50 கோடியை ஒரே தவணையில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கால பூஜை திட்டத்தில் இருந்த 12,597 திருக்கோயில்களின் வைப்பு நிதி ஒரு லட்சத்தினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அத்திருக்கோயில்களில் பணிபுரிகின்ற அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கிய அரசு மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் அரசு. மேலும் ஒரு கால பூஜை திட்டத்தில் கூடுதலாக 2,000 திருக்கோயில்களை இணைத்திட 40 கோடி ரூபாயை அரசே மானியமாக வழங்கி இருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியதை போல் திருக்கோயில்களின் திருப்பணிக்கு அரசு மானியம் வேறு எந்த ஆட்சியிலும் வழங்கப்பட்டதில்லை. இதுவரை திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.3,964 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன.
இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் துறை ஆவணங்களோடு ஒத்துப் போகின்ற 3 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அளவிடுகின்ற பணியை கடந்த 08.09.2021 அன்று தொடங்கி, நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ஒரு லட்சம் ஏக்கரை நிலத்தை அளவீடு செய்து HRCE என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடப்பட்டு, எந்த கோயிலுக்கு சொந்தமான இடம், எவ்வளவு பரப்பளவு என்பதை விளம்பரப் பலகையாகவும் வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் பிறகு இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதிலிருந்து தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். இப்பணியினை சிறப்பாக செய்திட்ட 172 நில அளவர்களும் சிறப்பு செய்யப்பட்டு, அதன் குழுத் தலைவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
29 திருகோயில்களில் யானைகள் இருக்கின்றது. மடத்திற்கு சொந்தமான 3 திருக்கோயில்களை தவிர்த்து 26 திருக்கோயில்களில் யானை குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும்,மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவுகள் வழங்கப்படுகின்றன. யானைகள் இருக்கின்ற இடங்களுக்கு அருகாமையிலேயே நடை பயிற்சிகுண்டான கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் இது போன்ற வசதிகள் இல்லாததால் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது திருக்கோயில் யானைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும், தேவையான கட்டுப்பாட்டுடன் உணவினையும் உட்கொள்வதாலும் புத்துணர்ச்சி முகாம் என்பது தேவையற்ற ஒன்றாகிவிட்டது.
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆரம்பித்து எந்த திருக்கோயிலாக இருந்தாலும் மன்னர்கள் காலத்தில் மக்களின் வரி பணத்தில் இருந்து தான் கட்டப்பட்டது. மக்களாட்சி வந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கம் தான் அதற்கு முழு பொறுப்பாகும். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அனைத்து திருக்கோயில்களுமே ஒரு கட்டுப்பாடுடன் இயங்கும். அப்படியில்லை என்றால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள 48 ஆயிரம் திருக்கோயில்களை யார் யாரிடம் ஒப்படைக்க முடியும். அடுத்து திருக்கோயில்களின் விலைமதிப்பற்ற செல்வங்கள், இனி எந்த காலத்திலையும் உருவாக்க முடியாத அளவிற்கு அற்புதமான கலை பொக்கிஷங்கள், நிலங்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்து சமய அறநிலைத்துறையால் தான் முடியும்.
ஆகவே இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற கட்சி ஆட்சியிலிருக்கின்ற மற்ற மாநிலங்களில் நிலைப்பாடு என்ன என்பதற்கான விளக்கத்தை தந்துவிட்ட பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறையை நீக்க கையெழுத்திடுவோம் என்று சொல்லுகின்ற முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும். நாட்டிலேயே ஏதாவது ஒரு வகையில் குழப்பத்தை நுழைக்க வேண்டும் அந்த குழப்பத்தின் வாயிலாக ஏதாவது அரசியலிலே தடுமாற்றங்கள் ஏற்படுமா? இந்துக்கள் அவர்கள் பக்கம் திரும்புவார்களா? என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்த ஆட்சியை பொறுத்தளவில் தடுமாறாத இரும்பு மனிதராக, இந்த ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் திகழ்கின்றார்.
இந்து சமய அறநிலையத்துறை தொடங்கப்பட்ட 1959 ஆம் ஆண்டிலிருந்து இன்றைய நாள் வரையில் கணக்கெடுத்துக் கொண்டால் இந்த 20 மாத காலத்தில் நடைபெற்ற திருப்பணிகள், திருத்தேர்கள், நந்தவனங்கள், திருக்குளங்கள் புனரமைப்பு, அர்ச்சகர் நலன் பாதுகாப்பு, கிராமப்புற, ஆதிதிராவிடர் திருக்கோயில் திருப்பணிகள், ஒரு கால பூஜை திட்டம் விரிவாக்கம் என எதை எடுத்துக் கொண்டாலும் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு ஒரு ஆன்மிகப் புரட்சியே ஏற்படுத்திய ஆட்சி முதலமைச்சர் ஆட்சி என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பதால் இவர்களின் கனவு அத்தனையும் பகல் கனவாக தான் முடியும்.
கடத்தப்பட்ட சிலைகள் மீட்டெடுப்பதில் இதுவரையில் 282 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.
கடத்தப்பட்டு வெளிநாட்டில் இருக்கின்ற 62 சிலைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மீட்கப்பட்ட சிலையை பெற தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படுகின்ற பொழுது அந்த சிலைகள் மீண்டும் அந்தந்த திருக்கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. நேற்றைக்கு முன்தினம் கூட சென்னையில் ஒரு தொழிலதிபர் வீட்டிலே 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இப்படி மீட்கப்படுகின்ற சிலைகள் ஒருபுறம் என்றாலும், மீண்டும் களவு போகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் திருடு போன சிலைகள் கண்டறியப்படுவதோடு, இருக்கின்ற சிலைகளும் களவு போகாமல் பாதுகாக்கப்படுகிறது.
மற்ற மதங்களுக்கு அதன் சொத்துக்களை முறையாக தணிக்கை செய்வதற்கு வக்பு போர்டு போன்ற அமைப்புகள் இருக்கின்றன. திருக்கோயில்களின் சொத்துக்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் அதை முறைப்படுத்துகின்ற, தொடர்ந்து நடத்துகின்ற முழு அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆத்திகர், நாத்திகர் என்றில்லாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்ட சட்ட திட்டத்தின்படி செயல்படுகின்ற துறை என்பதால் இது தனியாருக்கோ, வேறு யாருக்கோ என்ற கருத்து எள்ளளவும் நுழைவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை இவ்வாறு கூறினார்.