×

108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு நாளை நேர்முக தேர்வு: திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு  நாளை திருவல்லிகேணியில் நடைபெற உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1200க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் என்ற நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 160க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு நாளொன்றுக்கு 15000க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடடங்களுக்கான நேர்முகத் தேர்வு  நடைபெற உள்ளது. சென்னை திருவல்லிகேணி கஸ்தூரிபா அரசு மருத்துவனை வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் எழுத்து தேர்வு, மருத்துவத் தேர்வு,  நேர்முகத் தேர்வு மூலம் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவசரக்கால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களில் சேர 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். மேலும், 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிர் வேதியில், உயிரி தொழில் நுட்பவியல் அல்லது டிஜிஎன்எம் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடங்களில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் ஓட்டு உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்துள்ள 24 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பணியில் சேரலாம். உரிய சான்றிதழ்களுடன் நேரில் சென்று தேர்வில் பங்கேற்கலாம்.


Tags : Tiruvallykeeni Kasturiba Government Hospital , 108 Ambulance Service Medical Assistant, Driver Interview tomorrow: Tiruvallikeni Kasturiba Government Hospital
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...