×

யூடியூபர் பிராங்க்ஸ்டர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: யூடியூப்பில் சேனல் நடத்துபவர்கள் சிலர் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பிராங்க் வீடியோ எடுக்க காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதிலும், அதை மீறும் வகையிலேயே பல்வேறு பகுதிகளில் பிராங்க் வீடியோக்கள் தொடர்ந்து செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்ப்பவர்களுக்கு காமெடி நிகழ்ச்சி போன்று தெரிந்தாலும், அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் பிரைவசி பாதிக்கப்படுகிறது.

அந்த வரிசையில், Prankster Rahul என்ற யூடியூப் சேனல் மூலமாக ஆயிரக்கணக்கான பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் ராகுல், சமீபத்தில் அப்படியொரு வீடியோவை போட்டிருக்கிறார். பிராங்க் வீடியோக்களை வெளியிடுவது மூலமாக பிரபலமான ராகுலுக்கு, அதன்மூலம் சினிமா பட வாய்ப்புகளும் கிடைத்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரின்ஸ், ஹிப் ஹாப் ஆதியுடன் சிவகுமார் சபதம், ஜிவிபிரகாஷூடன் பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

இந்த பிராங்ஸ்டர் ராகுல் பிராங்க் செய்த ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் துணிக்கடையில் வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, அவர்களிடம் ரவுடியை போல அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் அவர் செயல்படுகிறார். இதை குறிப்பிட்டு, இந்த பிராங்க் வீடியோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை கொண்டு மிரட்டும் தொனியில் அமைந்துள்ளது என ரோஹித்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிராங்க்ஸ்டர் ராகுல் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், ராகுல் என்பவர் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை கொண்டு மிரட்டுகிறார். இதனால் அந்த முதியவருக்கு ஏதேனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது, என கேள்வி எழுப்பினார். மேலும் வெறும் பாலோயர்ஸ்கள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இது போன்ற செயலில் ராகுல் போன்றவர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஆயுதங்களை கொண்டு முதியவர்களை மிரட்டும் தொனியில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்ட ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், இது போன்று உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை தடை செய்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்தில் தான் தமிழ் யூட்யூபர் சுஹைலின் வீட்டில், அவரது ஹோம் டூர் வீடியோக்களை பார்த்து ஒருவர் திருட முயற்சி செய்தார். யூட்யூப் வீடியோக்கள் மூலம் பணமும் பிரபலமும் கிடைக்கின்றது என்றபோதிலும், அது தனி மனித சுதந்திரத்தை கெடுக்காத வகையிலும் அடுத்தவர் மற்றும் தங்களின் ப்ரைவசியை தொந்தரவு செய்யாத வகையிலும் யூட்யூபர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Chennai Police Commissioner ,Rahul , Complaint to Chennai Police Commissioner's office to take action against YouTuber prankster Rahul
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...