×

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வார கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அடையாறு ஆறு கடலில் சேரும் பகுதி முதல் திரு.வி.க பாலம் வரையிலான பகுதிகளை அகலப்படுத்தி தூர்வாரும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை முடிவு செய்ப்பட்டது. அடையாறு ஆற்றில் நீரின் போக்கு மற்றும் அது தாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பகுதி சதுப்பு நிலங்களுக்கு அருகிலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் உள்ளதால், ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை இது தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு கடலோர ஒங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்திற்கு அனுப்பியது. இந்நிலையில், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:  அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்ட அறிக்கை 2021ம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டது. ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சகத்தில் இந்த திட்டம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வல்லுனர் குழு  அமைத்து கடந்த ஆண்டு மார்ச், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது. அடையாறு முகத்துவார பகுதி அதிகளவில் மாசடைந்துள்ளது என வல்லுனர் குழு கண்டறிந்தது.

அதனை மாசுக் கட்டுப்பாட்டு வரியம் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளிடம் தகவல் பெற்று உறுதி செய்தது. மேலும் தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை அடுத்து, வல்லுனர் குழுவின் அறிக்கையின் படி ஒன்றிய சுற்றுசூழ்ல் அமைச்சகம் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு, கடலில் கலக்கும் இடம் வரை, அலையாத்தி தாவரங்கள் இருக்கும் இடம், தீவுகள் உள்ள இடம் தவிர்த்து 176.35 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரப்படவுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Coastal Regulatory Zone Authority ,Adyar river estuary ,Union Govt , Coastal Regulatory Zone Authority approves Adyar river estuary widening: Union Govt issues ordinance
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...