×

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில்களின் நிதியிலிருந்து செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர், கோயில் நிதியில் அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பித்தார்.

மேலும், கோயில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோயில் நிதியை அறநிலையத்துறைக்காக பயன்படுத்துகிறார்கள். எந்த தயக்கமும் இல்லாமல் கோயில் நிதியை அரசு நிதி போல பயன்படுத்துகிறார்கள். இது குறித்து சிறப்பு தணிக்கை செய்தால் அனைத்து விஷயங்களும் அம்பலத்துக்கு வரும் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிதியை தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது. கண்காணிப்பு என்ற பெயரில் கோயில் வளங்களை எடுக்க முடியாது என்று தெரிவித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : ICourt , Expenditure on charity should not be met from temple funds: ICourt orders
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு