×

ராஜ்பவன் மற்றும் முகாம் அலுவலகத்தில் கவர்னர், முதல்வர் தனித்தனியாக தேசிய கொடியேற்றினர்

திருமலை: ராஜ்பவனில் கவர்னரும், முகாம் அலுவலகத்தில் முதல்வரும் தனித்தனியாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதனால், தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சந்திரசேகரராவுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் குடியரசு  தின விழா ஒவ்வொரு ஆண்டும் செகந்திராபாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி ராஜ் பவனிலேயே  கவர்னர் தேசியக்கொடி ஏற்றிக்கொள்ள வேண்டும் என மாநில அரசு சார்பில்  ராஜ்பவனுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதுகுறித்து தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  இதனை விசாரித்த நீதிபதிகள்,  ஜனநாயக கடமையாக குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அவ்வாறு உள்ள நிலையில் குடியரசு தின விழாவை பொதுமக்கள் மத்தியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை வரை அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ராஜ் பவனிலேயே  குடியரசு தின விழாவை நடத்த கவர்னர் அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து நேற்று காலை 7 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதற்கு மாறாக முதல்வர் சந்திரசேகர ராவ் தனது முகாம் இல்லமான பிரகதீபவனில் தேசிய கொடியை ஏற்றி  வைத்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் மாநில தலைமை செயலாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கவர்னரும் முதல்வரும் தனித்தனியாக தேசியக்கொடி ஏற்றிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சட்டமீறல்; தமிழிசை குற்றச்சாட்டு
ஆளுநர் தமிழிசை கூறுகையில், ‘என்னை புறக்கணிப்பது தெலங்கானா முதல்வருக்கு பழக்கமாகவே போய்விட்டது. என்னால் தேசியக்கொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ, அதை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கினேன். மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Tags : Governor ,Chief Minister ,Raj Bhavan and Camp Office , The Governor and Chief Minister hoisted the national flag separately at the Raj Bhavan and Camp Office
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...