×

2 ஆண்டுக்கு பின் தடை நீங்கியது பேஸ்புக்கில் மீண்டும் டிரம்ப்

சான்ப்ரான்சிஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து பல மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தொடர்ந்து 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு டிரம்ப் தனது சமூகவலைதள பக்கங்களில் வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்டதே காரணம் எனக் கூறி அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடை நீக்கப்பட்டது.

இந்த நிலையில், டிரம்ப்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதித்த தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் க்ளெக் கூறும்போது, “வரும் வாரங்களில் டிரம்ப்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயல்படும். குற்றங்களை தடுக்க புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும்” என்றார்.

Tags : Trump ,Facebook , Trump is back on Facebook after 2 years of ban
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...