ஆஸி ஓபன் டென்னிஸ் பைனலில் ரைபாகினா சபலென்கா

மெல்போர்ன்: ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம்  டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு  முதல் அரையிறுதியில்  கஜகிஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா (23வயது, 25வது ரேங்க்), பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (33வயது, 24வது ரேங்க்) ஆகியோர் நேற்று  மோதினர். விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் நடப்பு சாம்பியனான ரைபாகினா,  ஆஸி ஓபனில் முதல் முறையாக அரையிறுதியில் விளையாடினார்.  ஆஸி ஓபனில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அசரென்கா 10 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில்  ஆடினார். அதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய முதல் செட்  டை-பிரேக்கர் வரை நீண்டது. அதனை 7-6(7-4) என்ற புள்ளிக்கணக்கில் ரைபாகினா கைப்பற்றினார்.

தொடர்ந்து 2வது செட்டையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் தனதாக்கினார். அதனால் 2-0 என்ற நேர் செட்களில் வாகை சூடி ரைபாகினா முதல் முறையாக ஆஸி ஓபன் இறுதி ஆட்டத்துக்கு  முன்னேறினார். தொடர்ந்து 2வது அரையிறுதியில் போலாந்து வீராங்கனை மேக்தா லினெட்(30 வயது, 45வது ரேங்க்),  பெலாரஸ் வீராங்கனை  அரினா சபலென்கா(24வயது, 5வது ரேங்க்)  ஆகியோர் களம் கண்டனர். ஆஸி ஓபனில் சபலென்கா 2021, 22ம் ஆண்டுகளில் 4வது சுற்று வரை முன்னேறியது அதிகபட்ச வெற்றியாக இருந்து. விம்பிள்டென், யுஎஸ் ஓபனை தொடர்ந்து இப்போது ஆஸி ஓபனிலும் அரையிறுதி வரை முன்னேறினார்.

அதேநேரத்தில் லினெட்  இதற்கு முன்பு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 2வது சுற்றை தாண்டியது இல்லை. அவரும் முதல்முறையாக அரையிறுதியில்  விளையாடினார். பரபரப்பான முதல் செட்டை சபலென்கா 7-6(7-1) என்ற புள்ளி கணக்கில் டை பிரேக்கர் மூலம் தனதாக்கினார். தொடர்ந்து 2வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதன் மூலம் 2-0 என்ற நேர்செட்களில் வென்று முதல் முறையாக ஆஸி ஓபன் இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் ஆஸி ஓபன் இறுதி ஆட்டத்தில் ரைபாகினா-சபலென்கா ஆகியோர் முதல்முறையாக  களம் காண உள்ளனர்.

Related Stories: